2010/12/19

பெண்..காமம்..அளவு??..குறுந்தொகை..

செக்ஸில் அதீதமான (இதனால்தானோ ஜ்யோவ்ராம் சுந்தரின் கதைநாயகன் பெயர் அதீதன்??)ஈடுபாடு உள்ள ஆண்களை.. செக்ஸில் வீக்கானவர் என்றோ.. கில்லாடி என்றோ.. அவர் க(ந)டந்து செல்லும் பொழுது ஒரு நமட்டு கண்சிமிட்டலின் மூலமோ பகிர்கிறோம்.. சம்பதப்பட்ட ஆண்களும் இதற்காக பெருமைபட்டுத்தான் கொள்கிறார்கள்..( நெருங்கிய நண்பர்களிடமாவது..)
ஆனால் ஆண்டாண்டு காலமாய்.. இந்த மேட்டரில் பெண்களின் நிலைப்பாடு பற்றி பொதுவில் கருத்து கூறுவது இல்லை.. இல்லை என்பதை விட கடினம் என்பதால்தான் "இல்லை" என்றே தோன்றுகிறது..அல்லது ஒற்றை வார்த்தையில் வேசி பட்டம் கட்டி விடுகிறது..

பெண்ணின் மனது கடலை விட ஆழம்.. வானை விட உயரம் என்று உயர்வுநவிர்ச்சி அணியில் ஏதாவது சொல்லிவிட்டு, விட்டு விடுகிறோம்..

எவ்வளவு பெரிய மாவீரனையும்.. ஒரு பெண்ணின் "அவ்வளவுதானா" என்ற ஒற்றை வார்த்தை சாய்க்கவல்லது..(புரியாதவர்கள் "மொழிவிளையாட்டை" அணுகவும்)

80 சதவீத பெண்களின் காம வாழ்க்கை எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்தபடி அமைவதில்லை என்று பல ஆய்வுகள் உறுதிபடுத்துகிறது.. காரணம் கணவனுக்கு தேவை என்றால் தேவை.. வேண்டாம் என்றால் எதிர்பாலினம் வலுக்கட்டாயப்படுத்துவதில்லை.. படுத்தினால், கணவன் சந்தேகத்தில் படுத்திவிடுவான் என்ற அச்சமும் மடமும் நாணமும் காரணமாய் இருக்குமோ??

பெண்களின் இயல்பான தோற்றம் மென்மையானதால் அவர்களின் இந்த நிலைப்பாட்டை கண்டுபிடிக்க முடியவில்லையோ என்ற எனக்கு ஏற்பட்ட ஐயம்.. இந்த குறுந்தொகை பாடலைப் பார்த்த பொழுது இன்னும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்..

விளக்கம்:

பெரிய பெரிய பலா மரங்களுக்கு நேர்த்தியாக மூங்கிலால் வேலியிட்ட தலைவா.. அந்த பலா பழங்கள் எப்படி இருக்கிறது என்று பார்.. எவ்வளவு சிறிய காம்பு போன்ற கிளையில் அவ்வளவு பெரிய ப(ழ‌)லத்தை தாங்கி கொண்டிருக்கிறது .. அது போலத்தான் இந்த சின்ன உயிரைத் தாங்கிய இவள் உடலின் காமம் மிகப் பெரியது.. யார் அறிவார் இதை??

பாடல்:

வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே

குறிஞ்சி திணையில் தோழி கூற்றாக அமைந்த இந்த அருமையான பாடலை எழுதியவர் தானைத் தலைவர் கபிலர்..